போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்து நடந்து வரும் நிலையில், 'தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை' என்று சிஐடியு செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சமீபத்தில் தமிழக அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
எனவே திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து, அதன்படி போராட்டம் தீவிரமடைந்துள்ளன.
தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று சிஐடியு செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
முறையாக பயிற்சி பெறாதவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நிதிச்சுமை என்பதை காரணமாக சொல்ல முடியாது. பழைய ஓய்வூதியம் உட்பட தங்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எந்தவித முன்னேற்றமும் இல்லை. மக்களை திசைதிருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார். சட்டப்படியான நடவடிக்கைகள் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.