அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரபலம் இல்லாத குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை தோற்கடித்ததோடு திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்தார்.
இதனையடுத்து தனது கட்சிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அடுத்து வரும் தேர்தலிலும் குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இதுகுறித்து ஜனவரி 24ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றபோது, டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரவுள்ளதால் தினகரனுக்கு குக்கர சின்னம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்