ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கும் ஒருமுறை காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்தி வரதர் திருவுருவம் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பதை வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில் வரும் 17ம் தேதி மீண்டும் அத்தி வரதரை குளத்தில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது
அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கத் தேவையான இடத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில் அத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அத்தி வரதரை இன்னும் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்ய விரும்புவதால் அத்தி வரதர் தரிசனம் காலத்தை நீட்டிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து விளக்கமளித்த இந்து அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது 'ஆகமவிதிப்படி கடந்த காலங்களில் 48 நாட்கள் மட்டுமே காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் தந்தார். அதேபோன்று இம்முறையும் 48 நாட்கள் மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படும். அத்தி வரதர் தரிசனம் காலம் நீட்டிக்க வாய்ப்பே இல்லை' என்று கூறினார். இதனை அடுத்து வரும் 17ஆம் தேதி அத்தி வரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது