அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமா?
இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை முதல் தியேட்டர்கள், மால்கள் மூடப்படுவது வரை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இதுவரை எட்டிப் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக மக்கள் சிலர் வெளியே வரும் போது மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் அனைவரும் மாஸ்க் அணிய தேவையில்லை என்றும் சளி இருமல் காய்ச்சல் போன்ற தொல்லைகள் இருப்பவர்கள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதும் என்றும் கொரோனா பாதிக்கப்படாத வரை மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியம் இல்லாதவர்கள் மாஸ்க் அணிவதால் தேவையுள்ளவர்களுக்கு மாஸ்க் கிடைக்காமல் இருப்பதைத் தடுக்கலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
மேலும் மாஸ்க் என்பது காலையிலிருந்து இரவு வரை அணிந்து விட்டு அதை கழட்டி வைத்துவிட்டு மறுநாளும் அதே மாஸ்க்கை அணிவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஒரு மாஸ்க் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கூடியவரை வெளியே செல்லாமல் இருப்பது அப்படியே வெளியே சென்றாலும் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது