இன்று சென்னையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ஆளுனர் ஆர்.என்.ரவி வழிபட்டபோது கோவில் ஊழியர்கள் பீதியில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் கோவில் பட்டாச்சாரியார் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் உள்ள ராமர் கோவில்களிலும், பிற பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அவ்வாறாக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோவில் நடந்த பூஜையில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், கோதண்டராமர் கோவில் பூசாரிகள், ஊழியர்கள் முகங்களில் அச்ச உணர்வு வெளிப்பட்டதாகவும், கோவில் வளாகம் கடுமையான அடக்குமுறைக்குள் இருக்கும் உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆளுனரின் பதிவிற்கு மறுப்பு தெரிவித்துள்ள கோதண்டராமர் கோவில் பட்டாச்சாரியார் கோவிலில் அடக்குமுறை எதுவும் நடக்கவில்லை என்றும், ஆளுனருக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அவருக்கு முறையான வரவேற்பு அளித்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆளுனருக்கும், ஆளும் திமுக தரப்புக்கு இடையே முட்டல், மோதல் தொடர்ந்து வரும் நிலையில் ஆளுனரின் இந்த பதிவால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.