காவிரி வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு வரும் செவ்வாய்க்கிழமை திட்ட வரைவுக்கான நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என்றும் அவ்வாறு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசை எச்சரித்தது
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக சற்றுமுன் தெரிவித்துள்ளார். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கும் அளவிற்கு போதிய நீர் இல்லை என்றும், அதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்பு கர்நாடக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதே சமயம் வரும் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.