ஒட்டகப்பால் டீ கடை மற்றும் பண்ணை மீது அதிகாரிகள் நடவடிக்கை. ஒட்டகம், மற்றும் குதிரைகள் உட்பட பல்வேறு விலங்குகள் மீட்பு
கோவை நீலாம்பூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை என்ற பெயரில் ஒட்டகம் பால் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த பண்ணையில் ஒட்டகங்கள், குதிரைகள் உட்பட பல்வேறு விலங்குகளும் பறவைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சங்கமித்ரா பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகள் மோசமான நிலையில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக இந்திய விலங்குகள் நல வாரியத்திற்கு புகார் சென்றுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த கோவை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள சில விலங்குகள் மோசமான நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்தனர்.
அங்கு இரண்டு ஒட்டகங்கள் நான்கு குதிரைகள் இரண்டு கழுதைகள் ஒரு நாய் மற்றும் இரண்டு நாய் குட்டிகள் மோசமான நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்த நிலையில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 3 ஒட்டகங்கள் காணாமல் போனதும் ஒரு ஒட்டகம் கொடூரமாக பராமரிக்கப்பட்டதால் உயிரிழந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும் பண்ணையில் சிலர் ஒட்டகங்களை தாக்கும் வீடியோக்களும் வெளியான நிலையில் அதன் அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக பண்ணையிலிருந்து கால்நடைகளை மீட்டு இரண்டு ஒட்டகங்களை சென்னையில் உள்ள பீப்பிள் பார் அலிமல்ஸ் வளாகத்திற்கும், இதர விலங்குகளை பராமரிப்பிற்காக தன்னார்வலர்கள் நடத்தும் இடத்திற்கும் மாற்றினர்.