கடந்த சில நாட்களுக்கு முன் டெல்டா மாவட்டங்களில் கரையை கடந்த கஜா புயல், கோரத்தாண்டவம் ஆடி, அந்த பகுதியையே சிதறடித்த நிலையில் செழிப்பாக வாழ்ந்த பல விவசாயிகளின் வாழ்க்கை தற்போது சீரழிந்துள்ளது. மீள முடியாது நஷ்டத்தில் டெல்டா விவசாயிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை மாவட்டம் சோழகன்குடிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்ற தென்னை விவசாயி, தனது தோப்பில் இருந்த அனைத்து தென்னை மரங்களும் கஜா புயலால் சாய்ந்ததை எண்ணி மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
சுந்தர்ராஜன் என்ற விவசாயியின் தற்கொலையையே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் தற்போது மேலும் ஒரு விவசாயி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருச்செல்வம் என்ற 45 வயது விவசாயி 23 ஏக்கரில் தென்னை, சவுக்கு மரங்கள் வளர்த்து வந்ததாகவும், கஜா புயலில் அனைத்து மரங்களும் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னொரு விவசாயி மரணத்திற்கு முன் அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.