நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
தமிழக சட்டப் பேரவையில் கடந்த 28ம் தேதி, நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கல்வி உரிமைக்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.