அதிமுக கட்சியின் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாக அதிமுக ஒற்றை தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக ஈபிஎஸ் தரப்பும் தொடர்ந்து கூறி வருகின்றன.
ஆனாலும் அதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் திமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னர் அதிமுகவில் இணைந்து மின்சாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி பாமக, தேமுதிக கட்சிகளிலும் இணைந்தார்.
கடைசியாக கடந்த 2103ல் தேமுதிகவிலிருந்து விலகியவர் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். தற்போது அவர் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.