அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ஓபிஎஸ் தெரிவித்துள்ள கருத்து கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
அதிமுக ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து ஓ.பன்னீர்செல்வமும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து ஈபிஎஸ்-ம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் “அரசு தன் கடமையை செய்கிறது. முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
என்ன இருந்தாலும் அதிமுகவினரை பிறரிடத்தில் விட்டுத்தர கூடாது என இந்த கருத்தால் பிற அதிமுகவினர் முகம் சுளித்துள்ளார்களாம். இதை காரணமாக கொண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடியார் ஆதரவாளர்கள் முயன்று வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.