தேனியில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று தேனி மாவட்டம் பேருந்து நிலையம் அருகே சுமார் 500 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அ.தி.மு.க தேனி நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார் மற்றும் சிலர் ஆசிரியர்களிடம் உங்களுக்கு இவ்வளவு சம்பளம் பத்தாதோ? தேவையில்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு திரும்புங்கள் என கூறினார்.
கோபமடைந்த ஆசிரியர்கள் இதனை சொல்ல நீங்கள் யார்? நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடுகிறோம் என கூறினர். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஆசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.