ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு ஏராளமானோர் படையெடுக்க தொடங்கியுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்தப் பேருந்து மலைப்பாதையில் 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, 11 ஆவது கொண்டை ஊசி வளைவில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தோர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.