மக்ஜாம் புயல் காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் குவியும் மக்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள மக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் மெல்ல கரையை நெருங்கி வருவதால் இன்றும், நாளையும் சென்னையில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ வேகத்தை காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலர் சூறை காற்றையும், கடல் சீற்றத்தையும் காண கடற்கரை நோக்கி வந்த வண்ணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாதபடி கடற்கரை பகுதிகளை தடுப்பு கொண்டு போலீஸார் மூடியுள்ளனர். மேலும் அப்பகுதிக்கு வருவோரை ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.