சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவர் ஒருவரின் உடலைத் தகனம் செய்ய மறுத்து மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததை அடுத்து அவரை அடக்கம் செய்ய சென்னை அம்பத்தூர் மின் மயானத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சடலத்தை தகனம் செய்ய அனுமதிக்கமாட்டோம் எனக் கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்களும் அங்கு கூடி இங்கு தகனம் செய்யக்கூடாது எனப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்து உடல் எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில் அம்பத்தூருக்கு அருகே உள்ள திருவேற்காடு பகுதியில் உடலைத் தகனம் செய்ய அதிகாரிகள் வந்திருப்பதாகத் தகவல் பரவியது. இதனை அடுத்து அங்கும் 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். மேலும் அங்குள்ள மயானத்தையும் மூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் நேற்று பரபரப்பான சூழல் உருவானது.
கொரோனாவுக்கு எதிராக தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் மக்களுக்கு இதுதான் நிலைமை என்பது வருத்தத்துக்குரியது. மோடி சொன்னால் கைதட்டுவோம், விளக்கு ஏற்றுவோம்… ஆனால் உடலை தகனம் செய்ய அனுமதிக்கமாட்டோம் எனத் தங்கள் போராட்டத்தின் மூலம் தெரிவித்துள்ளனர் மக்கள்.