உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உலகம் முழுவதும் வாகனங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் பெட்ரோல் டீசலின் பயன்பாடு பெருமளவு குறைந்தது. இதனால் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது என்பதும், கடந்த 20 ஆண்டுகளில் இந்த அளவுக்கு வீழ்ச்சியை கச்சா எண்ணெய் சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் கடந்த 15 நாட்களாக ஒரே விலையில் இருந்தது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அலுவலகம் செல்பவர்கள் தங்களுடைய வாகனத்தில் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று முதல் பெட்ரோல் டீசல் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்து உள்ளது
இதனால் இன்று முதல் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் லிட்டருக்கு ரூ 3.25 காசும் டீசல் ரூ 2.50 காசும் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருந்தாலும் பரவாயில்லை திடீரென தமிழக அரசு அதிகரித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் மட்டுமின்றி அனைத்து பொருட்களும் விலை உயரும் என்பதால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் அரசு ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
இது குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன என்பதும் உடனடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது