ஆர்கே நகரின் சட்டமன்ற உறுப்பினரான தினகரனின் வீட்டில் வெடிகுண்டு வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரும், ஆர்கே நகரின் சட்டமன்ற உறுப்பினருமான தினகரனின் வீடு சென்னை அடையாறில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் வீட்டின் முன் இருந்த இன்னோவா கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் கார் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன. இதில் அந்த காரின் டிரைவர் பாண்டிதுரை, போட்டோகிராபர் டார்வின் மற்றும் ஆட்டோ டிரைவர் ஒருவர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அங்கு வந்த போலீஸார் கார் டிரைவரை பிடித்து விசாரித்தனர். போலீஸாரின் விசாரணையில், அந்த கார் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளாவின் கார் என்பதும், தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக தினகரனை பழி வாங்குவதற்காகவே புல்லட் பரிமளா ஆட்களை ஏவி இப்படி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடியாட்கள் பெட்ரோல் குண்டை காரிலிருந்து தினகரனின் வீட்டினுள் வீச முயற்சித்தபோது அது தவறி காரிலே விழுந்துள்ளது.
இதனையடுத்து போலிஸார் புல்லட் பரிமளா மீது வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.