சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளுக்கு பின்னர், வேதியியல் தேர்வு முடிவு குறித்து புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக, செஞ்சி ஒன்றியத்தின் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் அனைவரும் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17 மாணவர்கள், அல் ஹிலால் தேர்வு மையத்தில் 35 மாணவர்கள், மற்றும் ஒரு தனியார் பள்ளியில் 91 பேர் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
ஒரே பகுதி, ஒரே பாடத்தில், இவ்வளவு மாணவர்கள் எடுக்கும் அபார மதிப்பெண்கள் சிலரை ஆச்சரியப்படுத்தி உள்ளன. இதனால், வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேர்வுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. உண்மை என்ன என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.