மறைந்த விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் 28ஆம் தேதி காலை 6.10 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகினர், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். மத்திய அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் திருச்சியில் விமான நிலைய இரண்டாவது முனையத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்தார். நடிப்பிலும் சரி, அரசியலிலும் சரி, தேச நலனுக்கு முன்னுரிமை அளித்தவர் விஜயகாந்த் எனவும் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தார் எனவும் பிரதமர் புகழாரம் சூட்டினார். மறைந்த விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.