புதுச்சேரி சட்டமன்ற தொகுதியில் தனித்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாமக கடைசி நேரத்தில் அனைத்து மனுக்களையும் வாபஸ் பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது பாமக. இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி ஒதுக்கப்படாததால் புதுச்சேரியில் கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக 10 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தது பாமக.
நேற்றோடு வேட்புமனுக்களை திரும்ப பெறும் அவகாசம் முடிவடைந்த நிலையில் கடைசி நேரத்தில் 10 தொகுதிகளிலும் அளித்த வேட்புமனுக்களை திடீரென பாமக வாபஸ் வாங்கியது. புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவது தமிழகத்தில் கூட்டணி கட்சிகளை முகம் சுளிக்க வைத்ததாகவும், அதனால் பாமக இந்த திடீர் முடிவை எடுத்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.