வரும் சட்டமன்ற தேர்தலில் எனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம். ஆனாலும், திமுக வேட்பாளர் தான் வெற்றி பெற வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 2026 சட்டமன்ற தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், எனக்கே கூட சீட் கிடைக்காமல் போனாலும், திமுக தான் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, அனைவரையும் வெற்றி பெறச் செய்ய தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தலைவர் யாரை வேட்பாளராக நிறுத்திகிறாரோ, அவர் தான் நான் கண்முன் தெரிய வேண்டுமே தவிர, வேறு எந்த எண்ணமும் தொண்டர்கள் மனதில் ஏற்படக்கூடாது என்றும், முதலமைச்சரின் உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும் என்றும், கழகத்திற்காக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம் என்று அமைச்சர் பொன்முடி கூறியது, அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."