சென்னை ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தர இருக்கும் நிலையில் எதிர்கட்சிகள் போராட்டம் ஏதாவது நடத்துவார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா அடுத்த மாதம் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு முன் ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும் போதும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த முறை நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது காற்றடைத்த கருப்பு பலூன்களை வானத்தில் பறக்கவிட்டு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றிற்கு எதிர்ப்பை தெரிவித்தது திமுக.
தற்போது முத்தலாக் தடை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என மத்திய அரசின் பல திட்டங்களுக்கு எதிராக தன் கையை உயர்த்தியிருக்கிறது திமுக. இந்நிலையில் அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்தால் எதிர் கட்சிகள் அன்று போலவே கறுப்பு பலூன் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் திமுக தரப்பிலோ இதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இரு அவைகளிலும் எதிர்ப்பை தெரிவித்திருந்த திமுக, தற்போது வெளியிட்ட சில செய்திகளில் காஷ்மீருக்கு எதிராக பேசவில்லை என்றும், மக்கள் கருத்தை கேட்காமல் செயல்படுத்தியதே தவறு என்றும் கூறியுள்ளது. இது திமுக மத்திய அரசிடம் அடங்கி போவது போலவே தெரிவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.