ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக முக ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, மருத்துவமனைகளுக்கு ஏற்ப மருத்துவர்களை அதிகரித்தல் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கடந்த 23ம் தேதியிலிருந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு பேசிப்பார்த்தும் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை.
இந்நிலையில் மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன், மார்க்ஸிஸ்ட் கம்யூ. கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் போராட்ட களத்திற்கு வந்து சென்றனர்.
இந்நிலையில் மருத்துவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத அதிமுகவை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மருத்துவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் அதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டு கொள்ளாததே இந்த போராட்டத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் எடப்பாடி தனது வெளிநாடு பயணம் குறித்தே கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும், மருத்துவர்களை அழைத்து பேச வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் “மருத்துவர்கள் போராட்டத்தால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல சரியான ஊதியம் மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களை அழைத்து பேச வேண்டிய பொறுப்பு முதல்வர் பழனிசாமிக்கு இருக்கிறது” என கூறியுள்ளார்.
மேலும் “மற்றவை போலவே இதிலும் அலட்சியம் காட்டி மக்களின் உயிரோடு விளையாடாமல் உரிய தீர்வை காண வேண்டும்” என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.