தமிழகத்தின் பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளாக, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு, மயக்கவியல், பிசியாலஜி போன்ற முக்கிய துறைகளில் பேராசிரியர் பதவி உயர்வுக்கான பேனல் அமைக்கப்படவில்லை. இதனால் அந்தந்த துறைகளில் நிர்வாக தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை கவனித்த தேசிய மருத்துவ கவுன்சில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை, கோவை ஆகிய நகரங்களை தவிர மற்ற கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லாதது, வருகை பதிவுகள் குறைவாக உள்ளன என்பதுபோன்ற குறைபாடுகள் இருந்ததாக என்.எம்.சி. தெரிவித்தது.
24 கல்லூரிகளுக்கான விளக்க காலக்கெடு முடிந்த நிலையில், தென்மாவட்டங்களில் உள்ள மதுரை உள்ளிட்ட சில கல்லூரிகளுக்கு இன்னும் ஒரு வாரம் அவகாசம் உள்ளது. இருப்பினும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது, மாணவர் சேர்க்கைக்கும் பாதிப்பு ஏற்படாது என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு மருத்தவர்கள் கூறுவதாவது: பதவி உயர்வு தவணைப்படி நடந்திருக்க வேண்டும். தவறினால், கல்வி தரமே பாதிக்கப்படுகிறது. சில இடங்களில் டீன் நியமனம் இருந்தாலும், பிற உயர் பதவிகள் காலியாக உள்ளன.
இளம் டாக்டர்கள் இந்த நிலைமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தால் 75% காலியிடங்களை நிரப்ப முடியும். ஆனால் சிலர் வயது நீட்டிப்பு மூலம் பதவியில் நீடிக்க விரும்புகிறார்கள். இந்நிலையில், தமிழக அரசு உயர்மட்ட குழு அமைத்து முழுமையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.