காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்டம் அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் வரைவு திட்டம் அறிக்கையில் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை குறிப்பிடுமா என்று தெரியவில்லை. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றப்பட்டது.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முத்தராசன் கூறியதாவது:-
தமிழக அரசு காவிரி விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்காமல் மோடி அரசு நீடிக்க வேண்டும் என்று அதிமுக நினைக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும். நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் ஆனால் முன்மாதிரியாக நடக்க வேண்டிய மத்திய அரசே உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.