வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியது காரணமாக, சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. இந்த சீற்றமான அலைகளை காண, ஆபத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடற்கரைக்கு வந்துள்ள பொதுமக்களை திரும்பிச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். சென்னை பட்டினப்பாக்கம் கடல் பகுதி மற்றும் மெரினாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதை பார்க்கக் கூட்டம் குவிவதை தொடர்ந்து, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், கடற்கரைக்கு சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்றும் போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையை மதித்து உயிர் காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் வருவதை தடுக்க, கடற்கரைக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.