தூத்துக்குடி மாவட்டம் தாதன் குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் ரயில் தண்டவாளத்தின் அடித்தளம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தண்டவாளத்தில் சில பகுதிகள் அந்தரத்தில் உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் வரலாறு காணாத மழையால் நெல்லை அருகே கங்கை கொண்டான் - தாழையூத்து இடையிலான ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் வரலாறு காணாத கனமழை காரணமாக 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை வழங்கியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் உத்தரவுகள் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.