கமல் சரித்திர உண்மைகளை பேசுவதாய் கூறி தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் என ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் மீண்டும் திருப்பரங்குன்றம் தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம். யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் கசக்கத்தான் செய்யும் என்றும் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் கூறியதாவது, சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கூறுவது சரித்திர உண்மையா.
விஸ்வரூபம் படம் வெளிவந்த போது இஸ்லாமியர்களை எப்படி பயங்கரவாதிகளாக சித்தரித்து காண்பித்தார் என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள். சிறுபான்மையினர் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக கமல் தொடர்ந்து இப்படி பேசி வருகின்றார் என பேசியுள்ளார்.