அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவசங்களை எரிப்பது போன்றும் சில வசனங்கள் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையிலும் இருந்ததால் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டு படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இப்பொழுது நடிகர்கள் அரசை விமர்சித்து படத்தில் நடிப்பது பேஷனாகிவிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் சர்கார் படத்தை எடுத்திருப்பார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ரஜினி போன்றோரெல்லாம் அரசியலுக்கு வர நினைத்திருக்கமாட்டார்கள். சினிமாகாரர்களுக்கு குளிர்விட்டுப் போயுள்ளது என காட்டமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம், ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் இவ்வளவு உயர் பதவியில் இருப்பவர்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்தும்படி பேசக் கூடாது. பார்த்துப் பேச வேண்டும் என கூறினார்.
இதே கேள்வியை நான் திரும்ப கேட்டால்.....(ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீங்கள் பேசியிருப்பீர்களா?) என அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினிகாந்த் பேசினார்.