கொரோனா முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாமக ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் பல மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர்-பிற பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை; உயிரிழந்த 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.” என்று கூறியுள்ளார்.
மேலும் “மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.