ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 50 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கேதாண்டிப்பட்டி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அதிவேகமாக சென்றது. உடனே அந்த லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ அளவிலான, 1000 மூட்டைகளில் 50, 000 கிலோ நியாய விலைக் (ரேஷன்) கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. லாரி ஓட்டுநர் சரவணன் என்பவரைக் கைது செய்து, ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், திருப்பத்தூர், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கிச் சென்று, ஆந்திராவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.