பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்ததற்கு சென்ற முறை எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இந்த முறை அமைதி காப்பதை கிண்டலடித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.
சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியின் பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொள்ள இன்று சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் சென்னை வந்தபோது எதிர்க்கட்சிகள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தன. ஆனால் இம்முறை அப்படி எந்தவித போராட்டாங்களும் நடத்தப்படவில்லை.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் “என்னங்க இது. சென்னை பலூன்காரங்களுக்கு வந்த சோதனை. ஒரு கருப்பு பலூன் கூட விக்கலியாமே.புரோகிதர் பேச்சுக்கு அவ்வளவு பயம் கலந்த மரியாதை ஜி. Welcome OUR HONOURABLE P.M.MODIJI.” என்று கிண்டல் செய்யும் தோனியில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கருப்பு பலூன் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் இந்த முறை அவர்கள் போராட்டத்தில் ஈடுபடாததால் பலூன் விற்பவர்களுக்கு வியாபாரம் ஆகவில்லை என்று கிண்டலடித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்து வந்ததை மறைமுகமாக குறிப்பிட்டு எஸ்.வி.சேகர் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவின் இந்தி குறித்த கருத்துக்காக மாநில அளவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டிருந்த நிலையில், ஸ்டாலினை அழைத்து பன்வாரிலால் புரோகித் பேசியது, அதற்கு பிறகு அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.