மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலமாகதான் விஜயகாந்துக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளம் கிடைத்தது. அதுபோல விஜயகாந்த் பிரபலமாக இருந்த அந்த சமயத்தில் விஜய்யை தூக்கி விடுவதற்காக அவருடன் இணைந்து செந்தூரபாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் விஜயகாந்த் – விஜய் உறவானது அண்ணன் – தம்பி உறவு போன்றது.
தேமுதிக தலைவரும், தமிழ் சினிமா நடிகருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் நடிகர் விஜய்யும் அஞ்சலி செலுத்த இரவு அங்கு வந்தார்.
விஜயகாந்த் உடலை கண்டதும் கண்ணீர் விட்டு அழுத அவர் அஞ்சலி செலுத்தி விட்டு கிளம்பினார். வெளியேறி காரில் ஏற அவர் சென்றபோது திடீரென எங்கிருந்தோ மர்ம நபர் செருப்பை விஜய் மீது வீசியதால் பரபரப்பு எழுந்தது. மேலும் சில தேமுதிகவினர் விஜய்யை நோக்கி “வெளியே போ.. வெளியே போ” என கத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது அண்ணன் போல கருதிய நபர் ஒருவருக்கு விஜய் அஞ்சலி செலுத்த வந்தபோது அவர் மீது செருப்பை வீசிய இந்த செயல் நாகரிகமற்றது என விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.