தமிழ்தாய் வாழ்த்திற்கு விஜயேந்திரர் எழுந்து நிற்காததால் எழுந்துள்ள சர்ச்சைக்கு காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.
பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், இந்த விழாவில் கலந்து கொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜேயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.
ஆனால், விழா முடிந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்த செயல் அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் அவர் தமிழை அவமரியாதை செய்து விட்டார் எனவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆண்டாள் விவகாரத்தை கையில் எடுத்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போர்க்கொடி பிடித்த ஹெச்.ராஜா மற்றும் இந்து அமைப்பினர் விஜேந்திரரை மன்னிப்பு கேட்ப சொல்வார்களா? எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சங்கரமடம் “பொதுவாக ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது தியானத்தில் இருப்பது வழக்கம். எனவே, இந்த நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, கடவுள் வாழ்த்து போல நினைத்து விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார். அதனால்தான் அவர் எழுந்து நிற்கவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.