மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார், அவருக்கு வயது 102.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சங்கரய்யா கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர்
இந்த நிலையில் சற்றுமுன் நபர் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் தி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், மக்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:
''மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்கப்படும். பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்" - என்று தெரிவித்துள்ளார்.