சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முதல் வகுப்பு பெற வாய்ப்பிருந்தும் அவர் அதை தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் பெங்களூர் பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்நிலையில், சசிகலா உள்ளிட்டோருக்கு சிறையில் 5 அறைகள் உட்பட சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதகாவும், இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயனா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும், முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின் அந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
தற்போது சிறையில் சசிகலா காளான் வளர்த்தல், கைவினை அழகு சாதனப் பொருட்களை தயாரித்தல் ஆகிய வேலைகளை செய்து வருகிறாராம். மேலும், அவர் கம்ப்யூட்டரும், கன்னட மொழியை சிறையில் கற்றுவருகிறார் எனவும் கூறப்படுகிறது.
அந்நிலையில், சசிகலாவிற்கு சில அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு தமிழகத்திலிருந்து ஒரு காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை வைக்க, அதை ஏற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா சில வசதிகளை செய்து கொடுத்துள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சிறையில் முதல் வகுப்பு பெற வாய்ப்பிருந்தும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அதற்கு முயற்சி செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது, வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்களை தாக்கல் செய்தால் சிறையில் முதல் வகுப்பு கிடைக்கும். ஆனால், சசிகலாவோ, இளவரசியோ இதுவரை அதை செய்யவில்லை. அதற்கான முயற்சியை அவரது குடும்பத்தினரும் எடுக்கவில்லை. அதில் என்ன மர்மம் அடங்கியிருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
தங்களது நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் கோடி பண பரிவர்த்தனை செய்து வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்களை சிறையில் தாக்கல் செய்ய ஏன் அஞ்சுகின்றனர் என்பது யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், சுதாகரன் மட்டும் வருமான வரி ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டு முதல் வகுப்பிற்கான சலுகைகளை பெற்று வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல், சிறையில், அவர் எந்த வேலையும் செய்யாமல் சக கைதிகளுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.