கடுமையானத் தண்ணீர் பற்றாக்குறைக் காரணமாக தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருசிலர் பெங்களூர், ஐதராபாத் கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இப்போது தாம்பரத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளி ஒன்றும் கடந்த இரு நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துராஜா பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுமார் 3000 மாணவிகள் படித்து வருகின்றன. கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரைப் படிக்கும் மாணவிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோருக்கு அறிவிப்பு தரப்பட்டுள்ளது.