Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி - சீமான் பெருமிதம்!

இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி - சீமான் பெருமிதம்!
, வியாழன், 26 மே 2022 (10:28 IST)
நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த தகவல் இடம்பெறும் என சீமான் பெருமிதம். 
 
இது குறித்து சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டு அரசு ஆவணங்களில் தாய்மொழி எது என்கிற குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதியப்படுவதில்லை. ஆனால், தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் தத்தம் தாய்மொழியை அரசு ஆவணங்களில் முறையாக அடையாளப்படுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. 
 
குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களில் கல்விக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கைப் படிவங்களிலும், மாற்றுச்சான்றிதழிலும் பயிற்றுமொழி மற்றும் முதல்மொழியுடன் மாணவரின் தாய்மொழியும் கட்டாயமாகக் குறிப்பிடப்படுகிறது என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அத்தகைய குறைந்தளவு நடைமுறைகூட இதுவரை கடைப்பிடிக்கவில்லை.
 
இதனைக் கண்டுணர்ந்த நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையானது, மற்ற மாநிலங்களிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழில் தாய்மொழியைக் குறிப்பிடும் பகுதியை இணைக்க வேண்டுமென்று முறையிட்டது.
 
தமிழ் மீட்சிப் பாசறை தகுந்த சான்றாவணங்களுடன் முறையீடு செய்ததை ஆய்வுக்குட்படுத்திய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடப்புக் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தாய்மொழியைக் குறிப்பிடும் பகுதியை முதன்முறையாக இணைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் வழங்கப்பெறும் மாற்றுச் சான்றிதழில் “தாய்மொழி” என்ற குறிப்பு இடம் பெற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு எமது உளமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும். தற்போது தாய்மொழியைக் குறிக்கும் முதன்மை அரசு ஆவணமான தமிழ்நாடு பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் திகழ்கிறது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 
 
இப்பெரும்பணியை நிறைவேற்றுவதற்காகத் தொடர்ந்து, அயராது உழைத்து, முழுமுயற்சி மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறைக்கும், முழு ஒத்துழைப்பு நல்கி உடன்நின்ற ‘தமிழர் அறிவர்’ இயக்கத்தின் தமிழ்த்திரு. அறிவன் சீனிவாசன் அவர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மேலும், தமிழ்நாட்டு மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களில் மாற்றுச் சான்றிதழ் பெறும்போது அதில் தாய்மொழி குறிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டுமெனவும், இல்லையென்றால் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, முறையிட்டு, தங்களது உரிமையைப் பெற்றிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்வா?