தன்னுடைய திட்டங்களை தான் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டு வருகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா முதல்வராக பதவியேற்றதிலிருந்து, பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்தவர்களில் ஐந்து பேரை துணை முதல்வராக நியமித்தது, ஆந்திரா போலீஸாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளித்தது, தனியார் பள்ளி கட்டணங்களை குறைத்தது ஆகியவற்றை கூறலாம்.
இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியை குறித்து, சீமான் தனது கட்சி நிகழ்வு ஒன்றில் பேசியபோது, ”தமிழ்நாட்டில் நான் கூறும் திட்டங்களெல்லாம் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார், அவர் எனது புத்தகத்தை வைத்திருப்பார் என நினைக்கிறேன். நான் சொன்னது போல் ஜெகன் மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்” என கூறியுள்ளார்.
பல மேடைகளில் சீமான், தனது திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். அந்த திட்டங்கள் எல்லாம் தமிழர் மரபு சார்ந்த வரலாறுகளையும் நாகரீகங்களையும் தொழில்களையும் மீட்பது குறித்து இருக்கும். இந்நிலையில் தற்போது தனது திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.