தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தில் இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 500 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை மனிதரை மனிதரே தூக்கும் அவலம் முன்னரே களையப்பட்டுவிட்டதாக பேசினார். இதனால் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “ஆதீனங்களுக்கான தெய்வீக பேரவையை உருவாக்கியது கருணாநிதி அரசுதான். அரசின் பல்வேறு அறநிலையத்துறை திட்டங்களும் ஆதீனங்களை வைத்தே தொடங்கப்பட்டன. தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் 22ம் தேதி தான் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதீனத்துடன் பேசி நல்ல முடிவை எடுப்பார்” என தெரிவித்துள்ளார்.