Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

Advertiesment
selvaperundhagai

Siva

, ஞாயிறு, 16 நவம்பர் 2025 (12:40 IST)
பிகார் வெற்றி என்பது மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் விளைந்ததே தவிர, மக்கள் வாக்களித்து வெற்றி பெறவில்லை.” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
பிகார் மாநிலத்தை போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சிலர் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். பிகார் மாநில தேர்தலை பொறுத்தவரை அங்கு வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் இணைந்து 16 நாட்கள் பிகார் மாநிலத்தில் வாகன அணிவகுப்பு மூலமாக பரப்புரை மேற்கொண்டார்கள்.
 
இந்த பின்னணியில் பிகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு தேஜஸ்வி யாதவை முதல்வராக இண்டியா கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றி வாய்ப்புகள் நிச்சயமாக இண்டியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
 
கடந்த 2005 முதல் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கிற நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெறுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பாஜக கூட்டணியின் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்று அரசியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
 
பிகார் மொத்த மக்கள் தொகையில் 33.76 சதவிகிதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள். பிஹாரில் உள்ள குடும்பங்களில் 64 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் பத்தாயிரத்துக்கும் குறைவாக வருவாய் பெற்றிருக்கிறார்கள். இண்டியாவிலேயே வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவிகிதமாக பிஹாரில் தலைவிரித்தாடி வருகிறது. ஏறத்தாழ 3 கோடி பேர் பிஹாரில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். இத்தகைய அவலநிலைக்கு பிகார் மாநிலத்தை கொண்டு சென்ற பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க எந்தவித நியாயமான காரணங்கள் இல்லை என்று உறுதியாக கூற முடியும். ஆனால் வெற்றி வாய்ப்ப எப்படி ஏற்பட்டது ?
 
இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் இருந்து 2023 இல் இந்திய தலைமை நீதிபதியை நீக்கி விட்டு பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என்று மாற்றியமைத்தார்களோ அன்றைக்கே இந்திய தேர்தல் ஆணையம் மோடி - அமித் ஷாவின் கூட்டணிக்குள் ஐக்கியமாகிவிட்டது.
 
இந்த பின்னணியில் தான் கடந்த காலங்களில் வாக்குத் திருட்டு மூலமாக மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அத்தகைய உத்தியை தான் பிஹாரிலும் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். பிஹார் வெற்றி என்பது மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் விளைந்ததே தவிர, மக்கள் வாக்களித்து பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை.
 
பிகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிப்பதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 1.21 கோடி பெண்களுக்கு தலா ரூபாய் 10,000 விநியோகம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட போது, அதனை தடுத்து நிறுத்த மறுத்து விட்டது. ஆனால், தெலுங்கானா, ஜார்கண்ட் மாநிலத்தில் இத்தகைய திட்டங்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 10,000 வாக்குகளுக்காக கொடுக்கப்பட்டது லஞ்ச பணமாகத் தான் கருத வேண்டும். இது வெற்றிக்கான மிக முக்கிய காரணமாகும்.
 
நடைபெற்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 20.6 சதவிகித வாக்குகளை பெற்று 89 இடங்களில் பாஜக.வும், 20.3 சதவிகித வாக்குகளை பெற்று 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. ஆனால், 23 சதவிகித வாக்குகளை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இன்றைக்கும் தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் விளங்கினாலும் 2020 சட்டமன்றத் தேர்தலில் 15.39 சதவிகித வாக்குகளை பெற்று 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது 85 இடங்களில் எப்படி வெற்றி பெற முடிந்தது என்பது கடுமையான சந்தேகத்திற்கு உரியதாகும். இதில் தேர்தல் ஆணையத்தின் சதி இருப்பதை அனைவரும் உறுதி செய்கிறார்கள்.
 
தமிழ்நாட்டில் திமுக. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காகவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற நோக்கத்திலும் இண்டியா கூட்டணி வெற்றிக் கூட்டணியயாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோத போக்கிற்கு எதிராக மக்கள் ஓரணியில் திரண்டு இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறார்கள்.
 
எக்கு கோட்டை போல இருக்கிற இண்டியா கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அதிமுக, பாஜக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி பங்கு போட்டு கொள்கிற சூழல் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருக்கப் போகிறது. இதன் அடிப்படையில் இண்டியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!