அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ.வான இவர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை இணையவிருப்பதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், செங்கோட்டையன் சபாநாயகர் அறையில் இருந்தபோது, தி.மு.க.வின் அமைச்சரான சேகர் பாபு அவரை சந்தித்து நீண்ட நேரம் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டம் காரணமாக பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், த.வெ.க.வில் இணையாமல் தி.மு.க.வில் இணைவதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது அடுத்த நகர்வு குறித்து செய்தியாளர்களிடம் "ஒரு நாள் பொறுத்திருங்கள்" என்று செங்கோட்டையன் மர்மம் காத்து வருகிறார். செங்கோட்டையன் - சேகர் பாபு சந்திப்பால், அவரது அரசியல் பாதை த.வெ.க.வை நோக்கியதா அல்லது தி.மு.க.வை நோக்கியதா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.