முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 31-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 31 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.