மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது விரைவாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த புகார் தொடர்பாகஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், கலாஷேத்ரா-வுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் விரும்பதகாதது மட்டுமின்றி மிகவும் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, நீதிபதி கண்ணன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டுமென்றும் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்றும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.