கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், 36 வயதான அனில் குமார் என்ற மீன் வியாபாரி, கொடுக்கல் வாங்கல் தகராறில் கொடூரமாக தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில், அவரை தாக்கியவர்கள் கத்தியால் குத்தியதில், கத்தி அவரது கழுத்திலேயே குத்திய நிலையில் நின்றது. கழுத்தில் கத்தியோடு அவர் மருத்துவமனைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனில்குமாருக்கு பணம் கொடுத்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததால், சீதாங்கோலி கிராமத்திற்கு சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயத்தின் தீவிரத்தை கவனிக்காமல், அனில் குமார் கத்தி கழுத்தில் குத்திய நிலையிலேயே கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறை நான்கு நபர்களை கைது செய்துள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது. மேலும், இந்த சம்பவம் திட்டமிட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.