கோவையில் ஆண்கள்,பெண்கள் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பாரம்பரிய இசைக்கேற்றவாறு ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.
இளம் தலைமுறையினருக்கு பழமையான கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பழமையான கலைகளை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை சிகரம் கலை குழுவின் முப்பெரும் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.எம்.ஆர்.மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
ஒயிலாட்டம்,வள்ளிக்கும்மி,ஜமாப் இசை என ஒரு சேர நடைபெற உள்ள இதில், நாட்டுப்புற பாடல்கள்களை பாட்டுக்கு ஏற்ப, ஆண்கள், பெண்கள்,சிறுவர்,சிறுமிகள் என அனைவரும் காலில் சலங்கை கட்டி ஒயிலாட்டம் ஆடி அசத்தினர்.இதில் சிறு வயது முதல் 50 வரையிலான ஆண்கள், பெண்கள் என முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கலைக்குழுவின் ஆசிரியர் அருண் ஆறுச்சாமி தலைமையில் நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
தொடர்ந்து நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாசிரியர் தியாகு நாகராஜ்,மற்றும் கலை பண்பாட்டு மைய பிரிவின் தீர்ப்பாளர் ஹேமலதா ஆகியோர் சிகரம் கலை குழுவினருக்கு நோபல் உலக சாதனைக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
முன்னதாக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்த நிகழ்ச்சியை ப்ரியா கௌதம் துவக்கி வைத்தார்.. நிகழ்ச்சியில் ஒயிலாட்ட பாடல்களை பிரபல கலைஞர்கள் முருகேசன், அருண்குமார்,ஆகியோர் பாட பம்பை இசை கலைஞர்கள் காளிதாஸ்,விஜயகுமார் ஆகியோர் வாசித்தனர்.