தூத்துகுடியில் புதையல் தோண்டிய விவகாரம்:
தூத்துக்குடியில் புதையலுக்கு ஆசைப்பட்டு குழி தோண்டியபோது நச்சு காற்று காரணமாக இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த இருவரும் தற்போது தப்பி ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் என்ற பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐம்பது அடிக்கும் மேலாக குழிதோண்டி உள்ளனர். கேரள மாந்திரீகர் அவருடைய வீட்டில் புதையல் இருப்பதாக கூறியதை அடுத்து இந்த குடும்பத்தினர் வீட்டில் குழி தோண்டியதாக தெரிகிறது
இந்த நிலையில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நான்கு பேர் திடீரென நச்சுக்காற்று காரணமாக மயங்கி விழுந்தனர். அவர்கள் நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் திடீரென சற்றுமுன் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களது பெயர் சிவமாலை மற்றும் சிவபாலன் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது