தமிழ்நாடெங்கும் மாவட்ட ஆட்சியர்கள் வளாகத்தில் சிறப்பு 'கல்விக்கடன் முகாம்களை' நாளை அரசு நடத்துகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எல்லோரும் கல்வி கற்க பள்ளி - கல்லூரிகளை திறந்தார்கள்.
கட்டணமில்லா பஸ் பயணம் - உதவித்தொகை - முதல் தலைமுறை பட்டதாரிக்கு கட்டண விலக்கு என்ற கலைஞர் அவர்களின் வழியில், கல்வி வளர்ச்சிக்காக காலை சிற்றுண்டி திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், பட்டப்படிப்புக்காக சேரவுள்ள மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் நம் திராவிட மாடல் அரசு தமிழ் நாடெங்கும் மாவட்ட ஆட்சியர்கள் வளாகத்தில் சிறப்பு 'கல்விக்கடன் முகாம்களை' நாளை நடத்துகிறது. இந்த முகாம்களில் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்று பயனடைய மாணவ - மாணவியர்களை வாழ்த்துகிறோம்''என்று தெரிவித்துள்ளார்.
இந்த கல்விக் கடன் முகாம்களின் பங்கேற்கும் மாணவர்கள் கொண்டு வர வேண்டிய சான்றுகள்: கல்விச் சான்று, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுத் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், நுழைவுத் தேர்வு முடிவுகள், கல்லூரி ஒப்புதல் கடிதம், கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டணம் விவரம், முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதிமொழி சான்று, கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் பாஸ் புத்தகம் ஆகும்.