திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தனது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என அதிரடியாக பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
ஸ்டாலினை எதிர்த்து வந்த அவரது சகோதரர் அழகிரியும் நான் திமுகவில் இணைய விரும்புகிறேன் எனவே நான் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டுத்தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த வகையில், தேமுதிக-வில் இருந்து விலகி, மீண்டும் திமுக-வில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன். இதற்கு ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கைதான் காரணம் என கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் நாளை காலை 11 மணியளவில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, கட்சியின் வெற்றிக்கு துரோகம் செய்ததாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு தேமுதிக-வில் இணைந்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். தற்போது மீண்டும் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் திட்டப்படி முல்லை வேந்தனை மீண்டும் திமுக-வில் சேர்க்க தருமபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியன் நேரில் சென்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.