பொது மக்களுக்கும் கொள்முதலாளர்களுக்கும் இடையில் பிளவை உண்டாக்கவே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதேசமயம் பால் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை 4 ரூபாய் உயர்த்தியும், எருமை பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விற்பனை விலையை 6 ரூபாய் அதிகப்படுத்தி இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்’ 2011 முதல் இன்று வரை மூன்று முறை பால் விலையை உயர்த்தியுள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால்வளம் லாபத்தில் இயங்குவதாகக் கூறுகிறார். முதல்வர் வேறு வழியின்றி விலையை உயர்த்தியுள்ளதாகக் கூறியுள்ளார். வயிற்றில் பால் வார்த்ததுபோல என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் பாலால் வயிற்றில் அடித்துள்ளனர். பொதுமக்களுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் பிளவை உண்டாக்கவே இந்த முடிவை அறிவித்துள்ளனர்’ எனக் கண்டனம் தெரிவித்தூள்ளார்.